Live Chennai
Live Chennai

சென்னைக்கு ரிஷிகேசம் சுவாமி சிவசிதானந்தர் வருகை

swamisiva291215ரிஷிகேசம் சுவாமி சிவசிதானந்தர் மற்றும் சுவாமி தர்மநிஷ்டானந்தர் ஆகியோர் சென்னையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு அருளாசி வழங்கவுள்ளதாக தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரிஷிகேசம் சிவானந்தாசிரமத்தின் முன்னாள் தலைவரும், குருதேவர் சுவாமி சிவானந்தரின் முக்கியச் சீடர்களில் ஒருவருமான சிதானந்த சரஸ்வதியின் 100-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான புனித யாத்திரைக் குழுவினர் வரும் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் சென்னையில் தங்கி பொதுமக்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளனர். சுவாமி சிவசிதானந்தர், சுவாமி தர்மநிஷ்டானந்தர் ஆகியோர் உள்பட குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சீடர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.

டிச.31-இல் சென்னை அண்ணாநகர் தெய்வநெறி அமைப்பின் கிளையிலும், ஜனவரி 1-இல் திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் சிவானந்தா ஃபவுண்டேஷனிலும் நடைபெறும் சிறப்புச் சத்சங்கத்தில் பங்கேற்று புத்தாண்டுச் செய்தி வழங்க உள்ளனர்.

ஜனவரி 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவானந்தர் சிலைக்கு சுவாமி சிவசிதானந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்; அதன் பிறகு காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள சிவானந்தா ஃபவுண்டேஷனில் நடைபெறும் சத்சங்க கூட்டத்தில் பங்கேற்று அவர் ஆசியுரை வழங்குகிறார்; இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள சுவாமி சத்யானந்த யோகா மையத்தில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழகப் பொறுப்பாளரான சுவாமி சிவானந்த சுந்தரானந்தர் கலந்து கொள்கிறார்.

இது குறித்து மேலும் தகவல் பெற அமைப்பின் சென்னைச் செயலர் எஸ்.சந்திரமோகன் அவர்களை 9840353941, 9789076145 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

English Summary:Swami Sivacidanantar Risikecam visit to Chennai.


comment closed