அனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் அர்ஜுன் கூறுகையில் “ இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது.

இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த
ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர்
சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

இந்த கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *