தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கினார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமீப காலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கான தேர்வுகளுக்கு பார்வையற்றவர்களை தயார்படுத்தும் வகையில் சென்னை கிண்டியில் விரைவில் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளோம்.
டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்குகிறது. இங்கு போட்டித்தேர்வுக்கான அனைத்துப் பாடப்புத்தகங்களும் உள்ளன. மேலும், போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சியும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக்கிறோம். புத்தகங்கள் வாங்குவதற்கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.
அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெறலாம். இவ்வாறு விஜயகுமார் பேசினார்.
English Summary: Braille books for the blind to participate in competitive exams allocated Rs 35 lakh.