சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் விதிகளை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டி இருப்பதால், அவற்றின் உரிமை யாளர்கள் சொத்து குறித்த சுய மதிப்பீட்டு விவர படிவத்தை அளிக்க தயக்கம் காட்டி வருகின்ற னர்.
சொத்து வரி சீராய்வு தொடர்பாக தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சீராய்வை 2018-19 நிதியாண் டின் முதல் அரையாண்டில் இருந்து நடைமுறைப்படுத்த வேண் டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சொத்து வரி சீராய்வு பணி மேற்கொள்வதற்காக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும், தங்களது சொத்து தொடர்பான சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கடந்த மாதம் அறிவுறுத்தி இருந்தது.
அதற்கான படிவங்கள் மாநகராட்சி மண்டல அலுவல கங்கள், வார்டு அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை ஆகிய இடங்களில் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. www.chennnaicorporation.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் விவரங்களை தாக்கல் செய்யலாம்.
மாநகராட்சி ஆவணங்களின்படி, சென்னையில் 6 லட்சம் வணிக கட்டிடங்கள் உட்பட மொத்தம் 17 லட்சத்து 10 ஆயிரம் சொத்து கள் உள்ளன. சுமார் 6 லட்சத்து 10 ஆயிரம் படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், இதுவரை 82 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு உரிமை யாளர்கள் சிலர் கூறும்போது, “எங்கள் வீடு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்பிறகு உரிய அனுமதியின்றி கூடுதல் அறைகள், கூடுதல் தளங்களை கட்டியுள்ளோம். சொத்து சுய மதிப்பீடு செய்தால், அதன்மூலம் ஏதேனும் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால், சொத்து சுய மதிப்பீட்டு விவரங் களை தாக்கல் செய்யாமல் இருக் கிறோம். பல கட்டிட உரிமையாளர் களும் இதுபோன்ற அச்சத்தில் உள்ளனர். சிலர் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காணாமல் உள் ளது. அதனாலும் படிவம் தாக்கல் செய்ய முடியாமல் உள்ளனர்” என்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: விதிமீறல் கட்டிடங்களை முறைப்படுத்துவதா அல்லது அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து பிற்காலத்தில் உரிய முடிவு எட்டப்படும். அதற்கும் சொத்து வரி சுய மதிப்பீட்டுக்கும் தொடர்பில்லை.
தற்போது பயன்படுத்தி வரும் சொத்துக்கு, அவர்களே சுயமதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறுதான் கேட்டுள்ளோம். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சுய மதிப்பீட்டு அறிக்கை அளிக்காவிட்டால், மாநகராட்சி நிர்வாகமே அதிகாரிகளை அனுப்பி, சொத்தை மதிப்பீடு செய்யும். அதற்கான அபராதத் தொகையும் வசூலிக்க நேரிடும்.