சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, மூன்று நாட்களில், அரசு பஸ்களில் மட்டும், ஐந்து லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்றும் ஒரு லட்சம் பேர் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, 3ம் தேதி முதல், 6ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2ம் தேதி, வெள்ளியன்று இரவு முதல், சென்னையில் இருந்து ஏராளமானோர், பஸ்கள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம், பிற மாவட்டங்களில் உள்ள, சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காக, சென்னையிலிருந்து, நேற்று முன்தினம், 3,575; நேற்று, 3,817; இன்று, 3,975 என, மொத்தம், 11 ஆயிரத்து, 367 பஸ்கள்; மற்ற ஊர்களில் இருந்து, 9,200 பஸ்கள் என, மொத்தம், 20 ஆயிரத்து, 567 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அரசு பஸ்களில் மட்டும், 2ம் தேதி, 1.62 லட்சம் பேர்; 3ம் தேதி, 2.21 லட்சம் பேர்; நேற்று மாலை வரை, 1.3 லட்சம் பேர் என, ஐந்து லட்சம் பேர், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். இன்றும் ஒரு லட்சம் பேர், அரசு பஸ்களில், வெளியூர் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு: தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், அதிகாலை வரை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து துறை அலுவலர்களும், காவல் துறை யினரும், தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளில், பஸ்கள் தாமதமின்றி செல்ல, சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணியரின் பாதுகாப்பு குறித்து, கட்டுப்பாட்டு அறையில் உள்ள, கண்காணிப்பு கேமராக்கள் வழியாக, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.