திருக்கார்த்திகை இந்துக்களால் கொண்டாடப்பெறும் முக்கிய பண்டிகையாகும். இந்த நன்னாளில் கார்த்திகை மாதத்து விண்மீனும் முழுமதியும் ஒன்று சேர இருக்க, சிவபெருமான் தேஜோரூபமாக, அக்கினிப் பிழம்பாகச் சுவாலைகள் எழும்பக் காட்சி அளித்தார் என்பது வரலாறு.
கார்த்திகை தீபத் திருநாளன்று அனைத்து வீடுகளிலும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி காண்பதற்கு இனிமையாகவும், மனதைக் குதூகலப்படுத்துவதாகவும் இருக்கும். எங்கு கானீனும் விளக்கின் ஒளி ஜுவாலையுடன் விளங்கும்.
அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரவைப் பகலாக்கும் இந்த தீபத் திருநாள் மூன்று நாள் கொண்டாடுப்படுகிறது.
எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்! தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.
திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.
மேற்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினம் நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோமாக!