சென்னை மெரினா கடற்கரை மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் அம்மா வைஃபை (Wi-Fi) மண்டலங்களை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, “தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வைஃபை எனும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும். முதல் கட்டமாக 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்று கடந்த 2016 செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
இதை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடியே 50 லட்சம் செல வில் 50 இடங்களில் வைஃபை மண்டலங்கள் அமைக்க கடந்த 2017 ஆகஸ்ட் 16-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம், திருச்சி மத்திய பேருந்து நிலையங்கள், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வைஃபை மண்டலங்களை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
அம்மா வைஃபை மண்டலங்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 20 நிமிடங்கள் வரை இணைய சேவை வசதி இலவசமாக வழங்கப்படும். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
English Summary: Now Amma Free Wi-Fi zones in 5 cities of Tamil Nadu.