கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஸ்திரத்தன்மையை அளிப்பது கொலஸ்டிரால் தான். உடலுக்குத் தேவையான கொலஸ்டிராலை பெரும்பாலான செல்கள் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன. தேவை ஏற்படும் போது கல்லீரல் உபரியாக உற்பத்தி செய்து பிற பாகங்களுக்கும் விநியோகிக்கிறது. ஹார்மோன் உற்பத்தி, பித்தநீர் சுரப்பு, நரம்புகளின் செயல் திறன் உட்பட உடலின் இயக்கத்துக்கு இன்றியமையாத வேதிப்பொருள் இது.
இவ்வாறு உடலுக்கு மிகவும் அவசியமான கொலஸ்டிரால், மாரடைப்புடன் எவ்வாறு தொடர்பை பெற்றது?
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் மாரடைப்பு மற்றும் இருதய நோய், சம்மந்தமான பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன.
இதற்கு இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தான் முக்கிய காரணம் என்று கருதப்பட்டது. இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இந்த அடைப்புகளை ஆராய்ந்ததில் அதில் பெருமளவு கொலஸ்டிரால் இருந்ததை அறிந்தார்கள். எனவே கொலஸ்டிரால், அடைப்புக்கும் அதன் காரணமாக மாரடைப்புக்கும் முக்கியக் காரணி என்று முடிவு செய்தார்கள்.
1940-களில் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர்களில் அமெரிக்காவின் ‘ஆன்சல் கீஸ்’ (Ancel Benjamin Keys) என்கிற உடலறிவியலாளர் முக்கியமானவர். உணவுகளைப் பற்றி அதிகம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
இவர் மாரடைப்பு என்பது இரத்த நாளம்/இருதய உறுப்பு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல – இது ஒரு வாழ்வியல் சம்மந்தப்பட்ட பிரச்னை என்று புரிந்து கொண்டார். அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதலே இதற்கு காரணம் என்று நம்பினார். அதிலும் குறிப்பாக உணவில் கொழுப்பு அதிகமுள்ள உணவு பயன்பாடு அதிகரித்ததை முக்கிய காரணமாக கருதினார்.
இதை நிரூபிக்க அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக இவரது ‘ஏழு நாடுகள் பரிசோதனை’ மிகவும் பிரசித்தம். 1958-ல் அமெரிக்கா, பின்லாந்து, ஹாலந்து, இத்தாலி, யுகோஸ்லேவியா, கிரீஸ் மற்றும் ஜப்பானில் நடந்தது. இதன் முதல் அறிக்கை 1963-ம் ஆண்டு வெளி வந்தது.
இப்பரிசோதனைகளின் மூலம் கீஸ் இருதய நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்டிரால் அதிகமாக இருந்ததை கண்டறிந்தார். இருதய நோய் இல்லாதவர்களுக்கு இந்த கொலஸ்டிரால் குறைவாக இருந்ததையும் அறிந்தார்.
இதனால் இருதய நோய்களுக்கு அதிக கொலஸ்டிரால் ஒரு முக்கிய காரணி என்று கண்டறிந்தார். கொலஸ்டிராலை குறைத்தால் இருதய நோய்களிலிருந்து வருமுன் காக்கலாம் என்பது இவரது கருத்து.
உடலில் இந்த கொலஸ்டிரால் அதிகரிக்க, இம்மக்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவை உண்ண ஆரம்பித்ததே காரணம் என்றும் கூறினார். இதனால் உடலில் கொலஸ்டிராலைக் குறைக்க கொழுப்புள்ள உணவுப் பொருள்களை தவிர்க்க பரிந்துரை செய்தார்.
கொலஸ்டிராலுக்கு எதிரான சிகிச்சையின் மூலம் இருதய நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும் என்பது இவரது வாதம். அப்போதைய மருத்துவ உலகும் அமெரிக்க அரசும் இவரது முடிவுகளை ஏற்றுக் கொண்டது.
இதனால் உலகம் முழுதும் மாரடைப்புக்கு கொலஸ்டிரால் பேராபத்தாக கருதப்பட்டது. அமெரிக்காவில் உணவு வழக்கம் மாறியது. கொழுப்பைக் குறைத்து மாவுப்பொருள் நிறைந்த உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தனர். புதிய புதிய கொழுப்பற்ற ஊட்டச்சத்து உணவுகள் தோன்ற ஆரம்பித்தன. புதிதாக வந்த தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் மூலம் மக்களை இது எளிதில் சென்றடைந்தது. கொழுப்பு என்பது வில்லனாகவே பார்க்கப்பட்டது. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும உணவுத்துறையும், உணவு பரிந்துரைத் துறையும் பெரிய தொழில் துறைகளாக மாறின.
கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் ஸ்டாடின் (Statin) வகை மருந்து உலக விற்பனையில் பல வருடங்களுக்கு #1 ஆக இருந்தது.
எனினும் அமெரிக்காவிலேயே 70-களிலேயே கொலஸ்டிரால் தியரிக்கு எதிராக சிறிது சிறிதாக குரல் எழும்பத் தொடங்கியது. அமெரிக்காவிலும், உலகிலும் கீஸின் முடிவுகளுக்கு எதிராக சிலர் எழுதத் தொடங்கினர்.
அமெரிக்க இருதய சங்கமும் அமெரிக்க அரசும் கீஸ் தியரிக்கு ஆதரவு தந்ததால் எதிர்க்குரல்கள் ஆரம்பத்தில் பெருமளவு எடுபடவில்லை.
ஆனாலும் சில வருடங்களிலேயே உலகின் பல்வேறு மருத்துவக் குழுக்கள் கீஸின் முடிவை எதிர்த்து அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்க ஆரம்பித்து விட்டனர்.
குறிப்பாக, உணவின் மூலமாக கொலஸ்டிரால் 10-15% மட்டுமே உடலில் வருகிறது. 85-90% கொலஸ்டிராலை உடலே உற்பத்தி செய்து கொள்கிறது. எனவே உணவின் மூலமாக கொலஸ்டிராலை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டார்கள்.
மேலும் சைவ உணவில் கொலஸ்டிராலே இல்லையெனினும் அவர்களுக்கும் இருதய பிரச்னைகள் உள்ளன. கொழுப்பை தவிர்ப்பதனால் மாவுப்பொருள் அதிகமாக உண்ணப்படுகிறது. இறுதியில் மாவுப்பொருள் உடலில் கொழுப்பாகத்தானே மாறுகிறது என்பது அவர்களது அறிவியல் எதிர் வாதங்களில் ஒன்று.
இது தவிர, கீஸின் ஆய்வு வடிவங்களில் பெரும் குழப்பம் இருந்ததை பின்னர் அறிந்தார்கள். குறிப்பாக ஆய்வைத் தொடங்கும் முன் 2நாடுகளிலிருந்து அவருக்கு தரவுகள் கிடைத்ததாகவும், அதில் தன் வாதத்துக்கு (கொழுப்பு தான் இருதய நோய்க்கு காரணம் – என்ற வாதம்) ஏற்றவாறு – இருதய நோயுடன் கொழுப்பு அதிகம் உண்ணும் 7 நாடுகளை மட்டும் தான் ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தார் – தன் தியரிக்கு உதவாத மீதம் உள்ள நாடுகளில் வேண்டுமென்றே ஆய்வுகள் நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உதாரணமாக பிரான்சில் மாவுப்பொருள் குறைவாகவும், கொழுப்பு தான் அதிகமாகவும் உண்ணப்படுகிறது. எனினும் அங்கு மாரடைப்பு பிரச்னை அதிகம் காணப்படவில்லை – அங்கு ஆய்வும் நடத்தவில்லை என்ற ஆதாரம் எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த ஆய்வின் ஊழல் குற்றச்சாட்டு சில வருடங்களில் நிரூபணமும் செய்யப்பட்டது.
சிறுகச்சிறுக, உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும் மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதைக் கண்டறிந்தார்கள். அதாவது கொலஸ்டிரால் சரியான அளவில் இருப்பவர்களுக்கும், இரத்த நாள அடைப்பு கணிசமாக இருப்பதைக் கண்டார்கள். அதே போல அதிகமாக கொலஸ்டிரால் இருப்பவர்கள் பலருக்கும் மாரடைப்பு அதிகமாக இருப்பதுமில்லை என்பதையும் அறிந்தார்கள். கொலஸ்டிரால் அவசியமின்றி தூற்றப்படுகிறது என்று அறிவித்தனர் ஆய்வு மருத்துவர்கள்.
இவற்றுடன் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் ஸ்டாடின் மருந்தின் பக்க விளைவுகளையும் மருத்துவ உலகம் உணரத் தொடங்கியது.
இவ்வாறான கொலஸ்டிரால் எதிர்ப்பாளர்களின் அறிவியல் வாதங்களும், கொலஸ்டிரால் ஆய்வுகளில் இருந்த ஊழல் வாதமும் சிறிது சிறிதாக மருத்துவ உலகால் ஏற்றுக்கொள்ளப்பட ஆரம்பித்தது.
நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று பிரிப்பதிலும் தற்போது சர்ச்சை தொடங்கியுள்ளது.
இதன் தொடர் விளைவாக சில வருடங்களுக்கு முன் அமெரிக்க அரசு, இருதய பிரச்னைகளுக்கும் கொலஸ்டிராலுக்கும் நேரடி தொடர்பு இல்லை என முதன்முறையாக அறிவித்தது.
இவ்வளவு மெத்தப்படித்தவர்கள் எங்கே தவறினார்கள்? கீஸ் போன்றவர்கள் “விளைவை காரணியாக” தவறாக புரிந்து கொண்டது தான் பிரச்னை என்று இன்றைய அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இருக்கலாம்.
கொலஸ்டிராலைப் பற்றி அறிவியலாளர்களின் கருத்து ஒரு புறம் இருக்கட்டும். பொதுமக்கள் எவ்வாறு கருத்து கொண்டிருக்க முடியும்? அனைவராலும் உணவு மற்றும் கொலஸ்டிராலின் அறிவியலை முழுதாக புரிந்து கொள்ள முடியாது தான்.
கீஸ் அவர்கள், இருதய பிரச்னையை முறையற்ற உணவு மற்றும் பிறழ்ந்த வாழ்வியல் முறையின் விளைவு என்று சரியாகத்தான் புரிந்து கொண்டார். ஆனால் அதற்குத் தீர்வாக ‘கொலஸ்டிரால் ஒரு கொழுப்பு, எனவே கொழுப்புள்ள உணவை கட்டுப்படுத்தினால் இருதய பிரச்னைகளை சமாளிக்கலாம்’ என்று தவறாக புரிந்து கொண்டார்.
பசியையும், ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதையும் புரிந்து கொண்டாலே போதும் அல்லவா. எதை எப்படி உண்ண வேண்டும் என்று அத்தனையும் எளிதில் புரிந்து விடுமே.
அத்துடன் கொலஸ்டிராலின் வரலாறை மட்டும் முறையாக படித்தாலே போதும், அதில் உள்ள அத்தனை குளறுபடிகளும் தெளிவாகும். கொலஸ்டிரால் சர்ச்சையில் உள்ள அறிவியல் சிக்கல்களும், ஊழலும் புரிந்து விடும்.
பொதுமக்கள் இதனை அறியவில்லை என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இந்திய டாக்டர்கள் சிலர் இன்னமும் கொலஸ்டிரால் மாயையிலிருந்து பெரிதும் விடுபடவில்லையே. ஏன்?
ஒருவேளை அவர்கள் பாடப்புத்தகங்களை படித்த அளவுக்கு கொலஸ்டிராலின் வரலாறை படிக்கவில்லையோ!?
– அக்கு ஹீலர் குருமாணிக்கம்.