மாஞ்சாநூல் காற்றாடி பறக்க விடுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள், சிறுவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மாஞ்சாநூல் காற்றாடி பறக்கவிடுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாஞ்சா நூலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விளக்கிய துணை கமிஷனர் சுப்புலட்சுமி, மேலும் கூறியதாவது:-
கடைகளில் மாஞ்சாநூல் விற்க கூடாது. அவற்றை எங்கும் பதுக்கியும் வைக்ககூடாது. தடையை மீறி காற்றாடி விற்கும் வியாபாரிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் மொட்டை மாடிக்கு சென்று காற்றாடி பறக்கவிடக்கூடாது.
தங்கள் பிள்ளைகள் காற்றாடி பறக்கவிடாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.