தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 91 ஆயிரம் போலீசார் ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருப்பதாக சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.
18ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் 63,951 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 27,400 போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்களித்தவர்களுக்கு அடையாள மை வைப்பதற்காக ரூ.2.5 கோடி செலவில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 700 மை பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு 2 பாட்டிகல் வீதம் இவை அனுப்பப்படும்.
இதனிடையே பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக இதுவரை ரூ.122.29 கோடி ரொக்கமும் 812 கிலோ தங்கமும் 482 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மேலும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளதாவது
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது;
இன்று மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம்;
வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்;
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே மாற்றப்பட்டுள்ளது.