கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
கடந்து சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி உபரிநீர் கல்லணை, கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.
நேற்று வீராணம் ஏரிக்கு 690 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் அதே 46.70 கனஅடியாகவே உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந்தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று 65 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 9 கனஅடி குறைவாகும்.
ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.
தற்போது அறுவடை பணிகள் நடப்பதாலும், கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வல்லம்படுகையில் இருந்து கஞ்சங்கொல்லை வரை உள்ள கொள்ளிடம் இடது கரைகளை கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் தண்டபாணி கூறியதாவது,
காவிரி தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிட ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலமும், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய பாசனத்துக்கு எப்போது தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பற்றி முடிவு எடுக்க வருகிற 17-ந் தேதி விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வீராணம், பெருமாள் மற்றும் வாலஜா ஆகிய 3 ஏரிகளை ஆழப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.