தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டே ரேஷன் கார்டு காலாவதியாகிவிட்டது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாரிக்கும் பணி நடந்து வருவதால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை என அரசின் தரப்பில் இருந்து காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கவுரவ ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு, சர்க்கரை ரேஷன் கார்டு, காவலர் ரேஷன் கார்டு என 4 விதமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், அதன்மூலமாக பொது விநியோக திட்டத்தின் பயனை உண்மையான பயனாளிகளுக்கு வழங்கிடவும், திட்டச்செலவை குறைக்கவும் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ நடை முறைக்கு வந்துவிடும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் பழைய ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை ஒருங்கிணைத்தல், ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்ட மென்பொருளை உருவாக்குதல் ஆகியவற்றிஏற்பட்ட காரணமாக திட்டம் தள்ளிப் போடப்பட்டது. தற்போது, ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ‘ஏடிஎம்’ கார்டு வடிவிலான ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ மக்களுக்கு வழங்கப்படும். ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கணினி மூலமாக இயங்கும் சிறு இயந்திரம் வழங்கப்படும். இணையதள தொடர்புடன் இயங்கும் இந்த கருவியில், ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டினை’ ‘ஸ்வைப்’ செய்து, பில் போடப்பட்டு, அந்த கார்டுக்கு உரிய ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான பயிற்சி ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இயந்திரத்தில் பில் போடப்பட்டதும், அது ‘ஆன்லைன்’ மூலமாக உயர் அலுவலகங்களுக்கும், ரேஷன் கார்டுதாரரின் செல்போனுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதற்கென தனி ‘ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டு வருகிறது. பயனாளிகள், இந்த ‘ஆப்ஸ்’ மூலமாக, தனது கார்டுக்கு என்ன பொருள் பெற வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் உள்ள பொருளின் இருப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்துக்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலமாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது போன்ற பணிகள் தொடரப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஒரு சில மாதங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், புதிய ரேஷன் கார்டு கேட்டு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பித்த 15 நாளில் புதிய கார்டு பெற முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
English Summary : Information about when will “Smart Ration Card” issued.