கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியியல், இ.சி.இ. உள்ளிட்ட கணினி படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் பல பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட படிப்புகளைக் கைவிடுவதும், சில பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்படுவதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் 2015-ஆம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 17 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பம் செய்த்ன. இதன்பேரில், 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை முடிவில் 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் நிரம்பவில்லை. இந்தக் கல்லூரிகளில் முக்கியத் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன. இதனால், 2016-17ஆம் கல்வியாண்டில் கல்லூரியை இழுத்து மூடவும், துறைகளை கைவிடவும் என 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பித்தன.
இதில், முதல் கட்டமாக வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் உள்ள புனித ஜான்ஸ் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டம் மோரையில் உள்ள வேல் ஸ்ரீ ரங்கா சங்க்கு எம்.சி.ஏ. கல்லூரி, வேல் டெக் ரங்கா சங்க்கு கலைக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் 2016-17 கல்வியாண்டு முதல் சேர்க்கை நடைபெறாது. அதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி பொறியியல் ஆகிய துறைகளைக் கைவிடவும், மாமல்லன் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. துறையைக் கைவிடவும், டேனிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. துறையைக் கைவிடவும், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ., வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு முதுநிலை ஆகிய துறைகளைக் கைவிடவும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.
மேலும் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எம்.இ. மென்பொருள் பொறியியல் துறையைக் கைவிடவும், திருநெல்வேலியில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் எம்.இ. கணினி-தகவல் தொடர்பு பொறியியல் துறையைக் கைவிடவும், ராமநாதபுரத்திலுள்ள செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பி.இ. தகவல் தொழில்நுட்பம், எம்.இ. பவர் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளைக் கைவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் 100 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூடவும், 284 கல்லூரிகளில் பல்வேறு துறைகளைக் கைவிடவும் என மொத்தமாக 384 கல்லூரிகளுக்கு 2016-17ஆம் கல்வியாண்டில் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.
இந்த வருடம் மூடப்பட்ட கல்லூரிகளை தவிர நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் விவரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. இதன்படி, பி.இ., பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளை வழங்கக் கூடிய 3,284 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 15,53,369 ஆகும். இவற்றில் 4,03,786 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை 527 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு என மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2,79,217 ஆகும். இவற்றில் 74,435 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
English Summary : 100 Engineering colleges closed across India. Details of colleges closed in Tamil Nadu.