பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் ரயில்களில் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க அவ்வபோது தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 33 சிறப்பு ரயில்களும், ஆகஸ்ட் மாதத்தில் 65 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால், இந்தாண்டு ஜூலை மாதம் 65 சிறப்பு ரயில்களும், ஆகஸ்ட் மாதம் 100 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முறையே 402 மற்றும் 412 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இதுவும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1011 பெட்டிகள் விரைவு ரயில்களில் தாற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐ.ஆர்.சி.டி. சி. நிறுவனம் 24 ஜோடி சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கியுள்ளது. கடந்தாண்டு மொத்தம் 22 சுற்றுலா ரயில்களை மட்டுமே ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கியது. அகலப்பாதை: செங்கல்பட்டு – விழுப்புரம் இடையேயான 103 கிலோ மீட்டர் தொலைவுக்கான அகலப்பாதை பணி முடிவடைந்தது. செங்கல்பட்டு – ஒட்டிவாக்கம் – கருங்குழி இடையிலான அகலப்பாதை பணி முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த பின்பு இந்த நெடுநாளைய பணி முடிவுக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் – திருச்சி இடையிலான அகலப்பாதை பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல பொள்ளாச்சி – பாலக்காடு இடையிலான 54 கிலோ மீட்டர் தொலைவுக்கான அகலப்பாதை பணியும் இப்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரயில்கள், ரயில் நிலையங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 109 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.66.65 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரயில் நிலையங்களை அசுத்தம் செய்த 609 பேரிடம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தொலைந்துபோன 67 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Southern Railway has informed that 100 special trains was enabled only in August for special occasions.