ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுகுறித்து பலர் பலவிதமான சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். 100 யூனிட்டுகள் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என ஒருசிலர் கூறி வரும் நிலையில் இதுகுறித்து மின்வாரியம் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
அதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்குக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Tamil Nadu electricity board explanation for 100 unit free current.