சென்னை மாநகரில் உள்ள 217 குடிசைப் பகுதிகளில் 113 டன் குப்பைகள் சமீபத்தில் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 6 முதல் 10 வரையுள்ள கோட்டங்களில் உள்ள 217 குடிசைப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பயனாக அந்த பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு தற்போது தூய்மையாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் கொசுப் புழுக்கள் உருவாகும் உபயோகமற்ற பொருள்களை அகற்றுதல், திறந்த நிலையில் உள்ள தொட்டிகளில் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளித்தல், குப்பைகளை அகற்றுதல், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் நடைபெற்றன. இந்த பணியில் மொத்தம் 1,826 பணியாளர்கள் 243 மூன்று சக்கர மிதிவண்டிகளின் மூலம் பணிகளை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, 3,682 கிலோ உபயோகமற்ற டயர்கள், 6,051 கிலோ உபயோகமற்ற பொருள்கள், 3,695 கிலோ பிளாஸ்டிக், இதர பொருள்கள், 26,150 கிலோ குப்பைகள், 62,764 கிலோ கட்டட இடிபாடுகள் என மொத்தம் 113 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதுதவிர, குடிசைப் பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரின் தரமும் பரிசோதிக்கப்பட்டது. மேலும், கொசுக்கள் உருவாகும் விதம், அதனைத் தடுக்கும் முறைகள், கைகளைக் கழுவும் முறை, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முறை உள்ளிட்டவை குறித்து குடிசை வாழ் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-113 tons garbage were collected from households of Chennai corporation