headerMainLeftBg
சென்னை நகரில் உரிமம் இல்லாமலும், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை இல்லாமலும் செயல்படும் ஓட்டல்களின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவை தயாரித்த கூட்டறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் எஸ்.ரகு என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பாரிமுனை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் வாகன நிறுத்தும் இடம் இல்லை. இந்த ஓட்டல்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகளும் இல்லை. பொது கழிவுநீர் கால்வாயில், கழிவு நீரை ஓட்டல் உரிமையாளர்கள் விட்டு விடுகின்றனர். எனவே, வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவற்றை அமைக்கும் வரை, இந்த 15 ஓட்டல்களும் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இதுகுறித்து சென்னை போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு கூட்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது

இந்த உத்தரவை அடுத்து நேற்று சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் எம்.டி.கணேசமூர்த்தி, மாநகராட்சி துணை ஆணையர் டி.ஜி.வினய் ஆகியோர் கூட்டாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பூக்கடைப் பகுதிகளில் உள்ள மலையபெருமாள் தெரு, பந்தர்தெரு, கோவிந்தப்பா தெரு ஆகிய இடங்களில் 6 ஓட்டல்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. அந்த ஓட்டல் நிர்வாகத்துக்கு, உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மே மாதம் 6 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு, மூடப்பட்டு விட்டது.

இதுபோல் சென்னை மாநகராட்சியும், சென்னை காவல்துறையும் இணைந்து நடத்திய ஆய்வில், 2007ஆம் ஆண்டுக்கு முன்பு 141 ஓட்டல்களும், 2007ஆம் ஆண்டுக்கு பிறகு 994 ஓட்டல்களும், ஆக மொத்தம் 1,135 ஓட்டல்கள் மாநகராட்சி உரிமம் பெறாமலும், போக்குவரத்து போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமலும் இயங்கி வருகின்றன. இந்த ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அந்த ஓட்டல்கள் குறித்த அனைத்து விவரங்களையும் மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளுக்கு பின்னர், சென்னை மாநகரில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மெஸ், டீ கடை உள்ளிட்ட உணவகங்களுக்கு மாநகராட்சி உரிமம் வழங்குவதற்கு முன்பு, அந்த அதன் உரிமையாளர்கள் போக்குவரத்து போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையில்லா சான்றிதழ் பெறாத உணவகங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிமம் வழங்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.