சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா, 2,000 ரூபாய், சிறப்பு நிதியுதவி வழங்குவதற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கு 700 கோடி ரூபாய்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் 2018 – 19ம் ஆண்டிற்கான, இறுதி துணை மதிப்பீட்டை தாக்கல் செய்தார்.
அதன் சிறப்புஅம்சங்கள்: இதில் 17 ஆயிரத்து 715 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வழி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில் 11 ஆயிரத்து 524 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 6,191 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 2019 கோடி ரூபாயை அரசு அனுமதித்தது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின், நிலுவை கடன்களை பங்கு மூலதன உதவியாக மாற்ற, 1,562 கோடி ரூபாய் ஊதிய திருத்தத்தின்படி, ஓய்வூதியம் வழங்க 1,323 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா, 2,000 ரூபாய் வழங்க 1,200 கோடி ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது. இதில் 700 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித் துறைக்கும் 500 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஊதியம் ஓய்வூதிய பலன்களுக்காக 1,969 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை இழப்பீட்டிற்காக 333 கோடி ரூபாய்; குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 162 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துணை மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.