சென்னையில் உள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களில் பசுமை முயற்சி மேற்கொண்டதற்காக, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமைக் குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி) பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பங்கஜ்குமார் பன்சாலிடம் இந்திய பசுமைக் குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி.) சென்னை பிரிவு தலைவர் சி.என்.ராகவேந்திரன் வழங்கினார்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிலையான பசுமையை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல் மெட்ரோ, அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏஜி-டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 14 நிலையங்களில் பசுமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த 14 நிலையங்கள் பிளாட்டினம் மதிப்பீடு தரத்துக்கு உயர்ந்துள்ளன.
முன்னதாக, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் கோபுரம், ஷெனாய் நகர், எழும்பூர் ஆகிய 5 சுரங்க ரயில் நிலையங்கள் உள்பட 18 நிலையங்கள் பிளாட்டினம் மதிப்பீடு தரத்துக்கு உயர்த்தப்பட்டன. இதன்மூலம் மொத்தம், 32 மெட்ரோ நிலையங்கள் ஐ.ஜி.பி.சி. பிளாட்டினம் தரத்துக்கு உயர்ந்துள்ளன.