சென்னை முக்கிய பகுதிகளில் ஒன்றான கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் நேற்று காலை திடீரென மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் பீதி அடைந்தனர்.
இந்தப் பள்ளம் 15 அடி ஆழத்துக்கு மேல் இருந்ததால் அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து பெரும் ஆபத்து இருந்ததை அடுத்து பள்ளத்தைச் சுற்றி உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த திடீர் பள்ளம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, அந்த சாலையில் உள்ள பாதாளச் சாக்கடையின் மேல்புற திறப்பு பகுதி (மேன்ஹோல்) திடீரென இடிந்து விழுந்ததால் இந்தப் பள்ளம் ஏற்பட்டதாகவும், இந்தத் திறப்புப் பகுதி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் கூறினார். மேலும் அந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று, வருவதால் வாகனங்களின் பளு தாங்காமல் நாளடைவில் உடைந்துவிட்டதாகவும் எனினும், இதன் காரணமாக கழிவுநீரை வெளியேற்றுவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்றும் பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பு ஒரு வாரத்துக்குள் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.
சென்னையில் பல பகுதிகளில் இதுபோன்ற திடீர் பள்ளம் அடிக்கடி தோன்றுவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
English Summary: 15 foot pit near Koyambedu bus stand.