கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற அவற்றின் உரிமையாளர்கள் 18 சதவீதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ குழு அறிவித்துள்ளது.
வாகன மாசுக் கட்டுப்பாட்டு சான்று மாநில அரசு சார்பில்தான் வழங்கப்படுகிறது. அதனைப் பெற ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா? அதற்கு விலக்கு அளிக்க முடியாதா? என்று கோவாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில் மாநில ஜிஎஸ்டி அதிகாரப்பூர்வ குழுவிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.
இதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ குழு பதில் அளித்துள்ளது. அதில், வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு சான்று வழங்கும் சேவைக்கு வாகன உரிமையாளர் கட்டணம் செலுத்துகிறார். எனவே, இந்த சேவைக்கு அவர் கண்டிப்பாக ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும். எனவே, விதிகளின்படி அந்தக் கட்டணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்ற கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன விதிப்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு சான்று அவசியமாகும். வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து இந்த சான்று வழங்கப்படுகிறது.