தமிழகத்தில் மொத்தம் 1,863 உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
33 துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்கள் 1,863 உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்முகத்தேர்வு இல்லாத எழுத்து தேர்வு மட்டும் நடத்தி அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படை மற்றும் ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் ஆன் லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்திற்கு சென்று விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 11-ந்தேதி கடைசி நாள். அன்று இரவு 11.59 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வித்துறை, பதிவுத்துறை, சிவில் துறை, பொதுசுகாதாரம், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட 33 வகையான துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
English Summary: 1,863 Assitant Workers Exam soon.TNPSC Leader Announcement.