தீபாவளியை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து ஒரே நாளில் 2.13 லட்சம் பயணிகள் சென்னை திரும்பியுள்ளனர் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: தீபாவளியை அடுத்து சென்னை திரும்ப பொதுமக்களுக்கு வசதியாக வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட நவ.10-ஆம் தேதி வரை 4,207 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் புதன்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 1,388 சிறப்புப் பேருந்துகளை இணைத்து 3,663 பேருந்துகள் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டன.
குறிப்பாக நவ.7 பிற்பகலில் தொடங்கி மறுநாள் காலை வரை 24 மணி நேரத்துக்குள் 2.13 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகள் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.
வியாழக்கிழமை 887 சிறப்பு பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 765 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. கடந்த 7-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (நவ. 9) வரை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 96 ஆயிரத்து 139 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதன் மூலம் ரூ.4.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னையை தவிர பிற முக்கிய ஊர்களுக்கும் பிற பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. புதன்கிழமை 2,350 சிறப்புப் பேருந்துகளும், வியாழக்கிழமை 1,450 சிறப்புப் பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 1,475 பேருந்துகளும் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.