தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் இந்திய முழுவதும் தேர்தல் ஆணையம் பரபரப்பாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஜனவரி 31ஆம் தேதி தமிழகத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கையை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில், இதில் 2.92 கோடி ஆண் வாக்காளர்களும், 2.98 கோடி பெண் வாக்காளர்களும், 5472 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 01.01.2019ஆம் தேதி வரை தகுதி பெற்றவர்களுக்கு, வாக்காளர் அட்டை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடத்த சத்ய பிரதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க வாய்ப்பளித்து 2 நாட்கள் முகாம் நடத்துமாறு தெரிவித்துள்ளார். இந்த முகாம் 23.02.2019 மற்றும் 24.02.2019 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.