சென்னை எழும்பூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் 14 நீதிமன்றங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தற்காலிகமாக சென்னை மூர் மார்கெட் வளாகத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் முதல் கட்டமாக 2 நீதிமன்றங்கள் மூர் மார்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் மற்ற நீதிமன்றங்களும் மாற்றப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 14 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களைப் புதுப்பிக்கவும், புதிய கட்டடங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்காக அரசு ரூ.10.88 கோடி ஒதுக்கியது. இந்தப் பணிகளை முடிக்க 15 மாத கால நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இந்த 15 மாதங்களுக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், கூடுதல் தலைமை நீதிமன்றங்கள் 2, நீதித்துறை நடுவர் மன்றங்கள் 8, விரைவு நீதிமன்றங்கள் 2 உள்பட 14 நீதிமன்றங்களை மூர் மார்க்கெட் வணிக கட்டடத்துக்கு தற்காலிகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அந்தக் கட்டடத்தின் 2-வது, 3 வது தளங்கள் நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இருப்பினும் நீதிமன்றங்களை இடம் மாற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாகப் புகார் கூறப்பட்டதை அடுத்து எழும்பூர் நீதிமன்றங்களை உடனடியாக மூர் மார்க்கெட் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு காரணமாக முதல் கட்டமாக எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த சென்னை 6-ஆவது நீதித்துறை நடுவர் மன்றம், 13-ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய இரு நீதிமன்றங்கள் நேற்று மூர்மார்கெட் வளாகத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

மீதியுள்ள 12 நீதிமன்றங்களும் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூர் மார்க்கெட் கட்டடத்துக்கு மாற்றப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. நீதிமன்றங்கள் முழுமையாக மூர் மார்க்கெட் கட்டடத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், எழும்பூர் நீதிமன்ற வளாகம் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் பின்னரே பொதுப்பணித்துறை புதிய கட்டடம் கட்டும் பணியையும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

English Summary : 14 courts from Chennai Egmore to be changed temporarily into Chennai Moore Market Complex before 31st July.