சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால், 20 சதவீதம் வரை வரி சலுகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் இயற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று முன்தினம் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 44,436 சொத்துடமைதாரர்கள் ரூ.245 கோடி வரி நிலுவை வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, ஒரு முறை சிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவைத்தொகை வைத்துள்ளவர்கள் 3 மாதத்துக்குள் நிலுவைத் தொகைசெலுத்தினால் 20 சதவீதம் வரை வரிச் சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணை வெளியிட வலியுறுத்த வேண்டும்.
எழும்பூர் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.5.89 கோடி செலவில் காத்திருக்கும் அறை, உணவு விடுதி உள்ளிட்ட பல்நோக்கு கூடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.