FaridabadMetroSolarPanelசென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அலுவலகங்கள், சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவற்றின் மின்சார தேவை வருடத்துக்கு சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.5 கோடி தேவைப்படுவதால் மின்சார செலவை குறைக்கும் வகையில்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 800 கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ‘சோலார்’ தகடுகள் அமைக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ‘சோலார்’ தகடுகள் பொருத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ள 77 கட்டிடங்கள் தேர்வு செய்து அவற்றில், ‘சோலார்’ தகடுகள் பொருத்தும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.

சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அலுவலகங்களின் தேவைக்கும், தெரு விளக்குகளின் பயன்பாட்டுக்கும் தற்போது பயன்படுத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லையில் 700-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35 கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ‘சோலார்’ தகடுகள் பொருத்தியுள்ளோம். இதன்மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 300 யூனிட் என மாதத்துக்கு 9 ஆயிரம் யூனிட் மின்சாரம் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்தகட்டமாக எந்தெந்த இடங்களில் பொருத்தவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மரங்களின் நிழல் விழுந்தால் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். இதற்காக சூரியனின் பார்வை நேரடியாக விழும் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.

சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாங்கள் பயன்படுத்தாத சமயத்தில் சேமிப்பதற்காக மின்சார வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த செயல்பாட்டுக்காக ‘நெட் மீட்டர்’ மின்சார வாரியத்திடம் இருந்து வாங்குகிறோம். அவர்கள் இதனை தாமதமாக தருவதால் ‘சோலார்’ தகடுகள் பொருத்தும் பணி மந்தம் அடைந்துள்ளது.

முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 77 இடங்களில் விரைவில் பொருத்திவிடுவோம். இரண்டாம் கட்டமாக மேலும் 130 கட்டிடங்களில் ‘சோலார்’ தகடுகள் பொருத்தப்படும். மொத்தம் சென்னையில் 207 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

English Summary: 207 solar panels on buildings owned by the Corporation of Chennai