டில்லி: நாட்டின் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களான ஐஐடி.களில் இளங்கலை பாடப்பிரிவுகள் தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படம் ஜேஇஇ என்ற நுழைவு தேர்வை பயன்படுத்தி புற்றீசல் போல் தனியார் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மாணவ மாணவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டு, பல கோடி ரூபாய்கள் புரளும் தொழிலாக மாறிவிட்டது.
இந்நிலையில் ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் ஒரு யோசனையை முன்வைத்துள்ளனர். ஐஐடி.களில் இளங்கலை பாடப்பரிவுகளை நிறுத்திவிட்டு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஐஐஎம் போல் கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த யோசனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சக அதிகாரிகள் இது குறித்து சட்ட வல்லுனர்கள், கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன் மூலம் 5ம் வகுப்பு முதல் ஜேஇஇ.க்கு பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வரும் 21ம் தேதி நடக்கும் ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐஐடி தொடர்பான அனைத்து முடிவுகளும் இந்த கவுன்சில் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து ஐஐடி.களின் இயக்குனர்கள் இடம்பெறுவார்கள். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் இதற்கு தலைவராக உள்ளார்.
பொதுவாக ஐஐடி.க்கள் இளங்கலை பாடத்திட்டத்துக்கும், அதை தொடர்ந்து வளாக நேர்காணல் மூலமான பணியமர்த்துதலுக்கு பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.