சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைக் கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வாகன எண்ணிக்கையில் தமிழ கம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனால், ஏற்படும் சாலை விபத் துகளை குறைக்கவும், பொதுமக் களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் போக்குவரத்துத் துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 86 ஆர்டிஓ அலுவலகங்கள், 59 பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சேவையை பெற முடியும். என்ஐசி நிறுவனம் இதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.
பண்டிகை நாட்களில் மக்கள் சிரமம் இன்றி வெளியூர்களுக்கு சென்றுவர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளோம். விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதுபற்றி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறோம். கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு கிளப் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரசு போக்குவரத்துக் கழகங் களுக்காக வாங்கப்பட்டுள்ள 475 புதிய பேருந்துகளை முதல்வர் பழனிசாமி, அடுத்த வாரம் தொடங்கிவைப்பார். முதல் கட்டமாக 100 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதில், சென்னையில் 80 பேருந்துகளும், கோவையில் 20 பேருந்துகளும் இயக்க முடிவு செய்துள்ளோம்.
டீசல் விலை உயர்வு என்பது போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. டீசல் மானியம் குறித்து முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
டீசல் விலை உயர்ந்தாலும் அரசுப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை. பேருந்து, மெட்ரோ ரயில்களில் மக்கள் ஒருங்கிணைந்த பயணம் செய்யும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறி னார். போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.