சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 23 ரயில் நிலையங்களில் மின்னணு கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல் புறநகர்(எம்எம்சி) ரயில் நிலையத்தில் நவீன மின்னணு கழிப்பறை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் வழியாக 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், 200-க்கும்மேற்பட்ட விரைவு, அதிவிரைவு ரயில்கள் என 550-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் நாள்தோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதன்படி, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி, மேற்கூரை அமைத்தல், குடிநீர் வசதி, நடைமேம்பாலம் என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட 23ரயில் நிலையங்களில் மின்னணு கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் மின்னணு கழிப்பறை அமைக்கப்படுகிறது. இப்பணி தற்போது வேகமாக நடைபெறுகிறது.