இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பான பி.எட். சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 5ஆம் தேதி முடிவடந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது. நேற்றைய முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,000 இடங்கள் மட்டுமே நிரம்பின. எனவே மீதமுள்ள 777 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான சேர்க்கை நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வு குறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 2 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் சிறப்புப் பிரிவினர், கணிதப் பிரிவினருக்கான சேர்க்கையில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. மீதமுள்ள இடங்களுக்கு தொடர்ந்து அக்டோபர் 15, 16-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார்.
English Summary : 2nd counselling for B.Ed has been started to fill 777 vacancies.