ledlampவெகுவிரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள சென்னை இரவு நேரத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காகவும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் நேரிடாமல் இருக்கவும் சென்னை முழுவதிலும் உள்ள தெருக்களில் எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னையில் விரைவில் 30 ஆயிரம் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்து பத்தாயிரம் தெருவிளக்கு கம்பங்கள், நவீன தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி 2013-14-ஆம் ஆண்டில் ரூ.51.37 கோடி செலவில் 13,609 தெருவிளக்கு கம்பங்களுடன், எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.94.48 கோடி செலவில் 34,425 தெரு விளக்குகள் கம்பங்களுடன் அமைக்கப்பட்டன.

இந்த ஆண்டில் ரூ.30.3 கோடி செலவில் 7,127 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை ரூ.256 கோடி செலவில் 79,998 எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 30,012 எல்இடி விளக்குகளை ரூ.145.64 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary: 30,000 LED lamps in Chennai Streets.Chennai Corporation announcement.