சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரூ.280 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டில்ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது.
முதல்கட்டமாக, கோட்டை, பூங்காநகர் ஆகிய ரயில் நிலையங்களில் செடிகள், பழைய தண்டவாளங்கள் என தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இப்போது, இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பூங்காநகர், கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது. 2 ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு 80 சதவீதம்நிறைவடைந்துள்ளது. கோட்டை ரயில் நிலையத்தில் 3,4,5-வதுநடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பூமியைசமப்படுத்தும் பணியும், அடித்தளம்அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்த பிறகு, கற்கள் பதிக்கும் பணி வரும் மாதங்களில் தொடங்கும்.
எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை திட்டப்பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 4-வது பாதை அமைப்பதன் மூலம் கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என அவர்கள் கூறினர்.