தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.180-ஐ எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ரூ.150-க்கும், சில்லறை விலையில் ரூ.200-க்கும் விற்கப்பட்டது. வரத்து குறைவால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்துவதற்காக, பிற மாநில அரசுகள் எடுக்காத முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, 67 பண்ணை பசுமைகடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு வாரம் நடைமுறையில் இருந்தது. பிறகு, அதை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, 111 நியாயவிலை கடைகளில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறோம்.
விற்பனையை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, 3-ம் கட்டமாக 300 கடைகளுக்கு விரிவாக்கம் செய்தோம். பல மாநிலங்களில் இதே பிரச்சினை இருக்கும் நிலையில், 300 கடைகள் என்பது போதாது. மேலும் பல கடைகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என முதல்வரின் அறிவுரை பெற்று தமிழகத்தில் ஆக.1-ம் தேதி (இன்று) முதல் குறைந்தபட்சம் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.