தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்க்கள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான டீலர்களை நியமிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட, எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. தமிழகத்தில், இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் சேர்த்து 4,844 பெட்ரோல், பங்க்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்க்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் துவக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும் இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனருமான, ஆர் .சித்தார்த்தன் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கு, பெட்ரோல், டீசல் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் புதிதாக 5,125; புதுச்சேரியில், 132 பெட்ரோல், பங்க்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான டீலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், டீலர்களுக்கான விண்ணப்பத்தை படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்; பங்க் அமையும் இடம், விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு நிபந்தனைகள் இருந்தன. தற்போது, இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. டீலராக விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே, நிலத்தின் பெயர், விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இறுதி அனுமதி கொடுப்பதற்குள், அந்த நிலத்தை அவரது பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டும். வெளிப்படையான குலுக்கல் முறையில், டீலர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.