சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் ரெயில் பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உணவுதான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையிலான உணவை சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. உயர் அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட தூரம் ரெயில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு சாப்பாடு கிடைக்கும் வகையிலும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இது நடைமுறைப்படுத்துகிறோம். இதில் கலவை சாத வகைகளான லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த உணவு வகைகள் ‘ரிடோர்ட் பாக்கெட்’ என்ற முறையில் ‘பேக்கிங்’ செய்யப்படுகிறது. குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாது. பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேற்கூறப்பட்ட 8 வகையான சாப்பாடு வகைகளும் அடுத்த 2 நாட்களுக்கு ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. டி.எப்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி. அந்த உணவு பொருட்களை எப்படி ‘பேக்கிங்’ செய்வது என்று கற்றுக்கொண்டு புதியதாக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
அப்படி அமைத்ததும், சாப்பாடு வகைகளின் விலைப்பட்டியல் மாற்றி அமைத்து அறிவிப்போம். இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்’ என்று பெயர் வைத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டத்தை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா இன்று தொடங்கிவைத்தார்.
English Summary : 6 months of non-perishable food for the long-distance train passengers.
The introduction of the railway station in Chennai