தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பெயர் சேர்க்க மட்டும் 4.44 லட்சம் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
பணிக்கு செல்வோர் வசதிக்காக, இந்த மாதத்தில் 4 நாட்கள் அதாவது, நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட சிறப்பு முகாம், தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இதில், பெயர் சேர்க்க 4 லட்சத்து 44,019 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெயரை நீக்க 77,698 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 30,614 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைக்க 57,943 பேர் படிவம் அளித்துள்ளனர். வரும் நவம்பர் 26, 27-ம் தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தவிர, வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் நேரடியாகவும், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல், வாக்காளர் பதிவு செயலி மூலமும் வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம்.