சென்னை: சத்யம் தியேட்டர் மற்றும் அதன் மற்ற தியேட்டர்களை ரூ850 கோடிக்கு வாங்கியது பிவிஆர் நிறுவனம். பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் தியேட்டர்களை திறந்துள்ளது.
இந்த நிறுவனம் ஐதராபாத், பெங்களூரில் பல தியேட்டர்களை வாங்கியுள்ளது. அடுத்ததாக சென்னை மற்றும் பிற நகரங்களில் பிரபலமாக உள்ள சத்யம் தியேட்டர்களை வாங்குகிறது. சத்யம் தியேட்டரின் எஸ்பிஐ நிறுவன பங்குகளை ரூ633 கோடிக்கு பிவிஆர் வாங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ850 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் 1974ல் சத்யம் தியேட்டர் துவங்கப்பட்டது. பின்னர் சென்னையில் பிளாசோ, எஸ்கேப், சத்யம் எஸ்2 பெரம்பூர், எஸ்2 தியாகராஜா என 5 இடங்களில் இதன் தியேட்டர்கள் உள்ளன.
இதுதவிர புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தியேட்டர்கள் உள்ளன. மொத்தம் 10 நகரங்களில், 76 திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில், சத்யம் சினிமாஸின் 77.1 சதவீதம் பங்குகளை, பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பிவிஆர் சினிமாஸ் உலகின் 7வது பெரிய சினிமா நிறுவனமாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் 60 நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 152 தியேட்டர்கள் உள்ளன. சத்யம் தியேட்டர் பங்குகளை ரூ633 கோடிக்கு பிவிஆர் வாங்கியுள்ளது.
இந்த தொகையை ஒரு மாதத்தில் சத்யம் சினிமாஸ நிறுவன பங்குதாரர்களுக்கு பிவிஆர் வழங்கும். சத்யம் தியேட்டரை பிவிஆர் வாங்கியிருந்தாலும் உடனடியாக தியேட்டர் பெயர் மாற்றப்படாது என பிவிஆர் நிறுவன அதிகாரி நிதின் சூட் தெரிவித்தார்.