சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார்.
முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடவுள்ளார். மேலும், இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் அனிருத், இமான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறது படக்குழு. இதில் அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன்ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்து வருகிறார்.