கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் கடுமையாக உள்ளது. செவ்வாய்க் கிழமையன்று புதுச்சேரி உட்பட 8 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக கடலூரில் 103, குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 5 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக திருச்சியில் 102, சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை மேகங்கள் உருவாகி அடுத்த சில தினங்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரண மாக ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகள்ளாரில் 2 செமீ, வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.