சென்னை: ரஜினி மக்கள் மன்றத்துக்கென பல்வேறு விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்:
1. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரத்திரமாக பொருத்தக்கூடாது.
2. மன்ற கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
3. இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.
4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.
5. ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.
6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.
7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.
8. ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள்/ பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.
9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.
12. தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.
14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.
15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.
18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.
19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.
20. சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.
22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.
23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.
24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்துக்கு மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த் முகவுரை எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
அதில், “மன்றத்தை வலுப்படுத்தவும் அன்றாட செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் மன்றத்தின் நிர்வாக விதிமுறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் இந்த விதிமுறைகளின்படி மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.