போக்குவரத்துக்கு வாகன விதிமீறல், அபராத தொகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: மொத்தம் 42 போக்குவரத்து விதிமீறல்கள், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 200 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்தினால் மட்டும் போதுமானது.
லைசென்ஸ் பெறாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் (Without License) 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் லைசென்ஸ் எடுத்து வராத (Not Carrying License) வாகன ஓட்டிகளுக்கான அபராதம் 200 ரூபாய். ஆனால் ஒரிஜினல் லைசென்ஸை எப்போதும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஏனெனில் போலீசார் கேட்கும்போது, டிஜி லாக்கர், எம் பரிவாகன் போன்ற மொபைல் ஆப்களுடன் (Mobile App) இணைக்கப்பட்ட டிஜிட்டல் லைசென்ஸை காட்டினாலே போதுமானது. டிஜிட்டல் லைசென்ஸை ஏற்று கொள்ள வேண்டும் என மத்திய அரசே உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களின் நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அதை மீறி, பேன்ஸி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை 1,000 ரூபாய். ஹெல்மெட் அணியாத (Without Helmet) இரு சக்கர வாகன ஓட்டிகள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படும் என ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளும், தேவையில்லாமல் ஹாரனை ஒலிக்கும் வாகன ஓட்டிகளும் (Honking in Silence Zone) 200 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். காரில், சீட் பெல்ட் அணியாததற்கான அபராத தொகையும் 200 ரூபாய்தான்.
நோ பார்க்கிங் (No Parking) ஏரியாவில் வாகனம் நிறுத்துபவர்களும், 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் முறைகேடாக ரேஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கான அபராத தொகை 2,000 ரூபாய்.
ஒவ்வொரு பகுதியிலும் இந்த வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என போலீசார் வரையறை செய்துள்ளனர். ஸ்பீட் லிமிட் தொடர்பான பலகைகள் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதனை மீறி அதிவேகத்தில் பறக்கும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் 1,000 ரூபாய்.
விபத்துக்களை தவிர்ப்பதில் வாகனங்களின் சைடு மிரர்களுக்கு (Side Mirror) முக்கிய பங்குள்ளது. ஆனால் ஒரு சிலர், ஸ்டைல் என கருதி, சைடு மிரர்களை அகற்றி விடுகின்றனர். ஆனால் சட்டப்படி அது தவறு. சைடு மிரர் இல்லாத வாகனங்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதிக அபராதம் விதிக்கும் போலீசார் குறித்து, சமூகவலைதளங்கள் மூலமாக, புகார் அளிக்கலாம். அல்லது 100க்கு போன் செய்தோ, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றோ, புகார் அளிக்கலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.