சென்னை, ‘தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 618 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றோர், இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும், இறுதி கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பின. பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2ம் கட்ட கவுன்சிலிங், ஆக., 29ல் நிறைவடைந்தது. இதில், 618 இடங்கள் காலியாக உள்ளன.இதுவரை பல் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்காதவர்கள், காலியாக உள்ள இந்த இடங்களுக்கு, புதிதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.இதற்கிடையில், பி.டி.எஸ்., படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது. எனவே, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதிதாக விண்ணப்பிப்போர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மருத்துவ படிப்புக்கு, ஆக., 28 வரை விண்ணப்பிக்காதவர்கள், தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘மருத்துவ தேர்வு குழு செயலர், கீழ்ப்பாக்கம், சென்னை’ என்ற முகவரிக்கு, செப்., 6 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நீட் தேர்வில், பொது பிரிவினர் 119 மதிப்பெண்; பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 96 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.