செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு 6 நாள்கள் விடுமுறை என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது குறித்தும், அதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளது குறித்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்.
வங்கிகளின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. வங்கிகளுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2-ஆவது சனிக்கிழமையான செப்டம்பர் 8-ஆம் தேதி விடுமுறை தினமாகும். செப்டம்பர் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்காது. ஆனால், அந்த தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் மூடியிருக்கும். இந்த நாள்களில் ஏடிஎம் மையங்கள் முழு வீச்சில் இயங்கும். ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது.
அனைத்து ஏடிஎம்களிலும் போதுமான பணம் நிரப்பப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.