கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பம்பை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆறு திசை மாறி ஓடும் சூழ்நிலை உருவானது.
இதனால் சபரிமலை செல்ல பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த 3 பாலங்கள் இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மேலும் பெரிய பெரிய பாறைகளும், மரங்களும் ஆங்காங்கே பாதைகளை அடைத்தபடி கிடக்கிறது. இதனால் ஆவணி மாத பூஜையின் போது பக்தர்கள் யாரும் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது சபரிமலையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. புதிய தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.
சபரிமலையில் நேற்றும் லேசான மழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட குறைவான அளவு பக்தர்களே சபரிமலைக்கு வந்திருந்தனர். பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால் ஆங்காங்கே தற்காலிக டெண்டுகள் அமைத்து பக்தர்கள் தங்கி இருந்தனர். மின் வசதி இல்லாததால் பேட்டரி லைட்டுகளை பக்தர்கள் கொண்டு சென்றிருந்தனர். வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
நவம்பர் மாதம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை சபரி மலையில் நடைபெற உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள் என்பதால் மண்டல பூஜைக்கு முன்பு சபரிமலையில் சீரமைப்பு பணிகளை விரை வுப்படுத்தி முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.