பொறியியல் படிப்பு உள்ளது போன்றே, கலை-அறிவியல் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு முறையை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் வங்கி மேலாண்மைத் துறை வெள்ளி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன், நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது போன்று, கலை -அறிவியல் படிப்புகளிலும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தால், வரும் கல்வியாண்டில் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
நிரந்தர பணி நீக்கம்: அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய பேராசிரியர்கள் உள்பட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் உமா உள்ளிட்ட பேராசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதுபோன்ற தேர்வு முறைகேடுகள் வரும் காலங்களில் நடைபெறாத வகையில், தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.