சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான பணத்தை இ-வேலட் முறையில் செலுத்தும் புதிய முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது 80 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நாள்தோறும் சுமார் 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வீடுகளுக்கு சிலிண்டர்களை விநியோகம் செய்யும்போது, அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்துகின்றனர். இவ்வாறு பணமாக செலுத்தும்போது, சில்லறை பிரச்சினையால் வாடிக்கையாளர்களால் சரியான சில்லறை கொடுக்க முடிவதில்லை.
அத்துடன், சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியர்களும் கூடுதல் பணம் கேட்பதாக புகார் வருகிறது. அத்துடன், ஆன்லைன் மூலம் சிலிண்டர் பதிவு செய்யும் முறையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.
எனவே, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் டெபிட், கிரெடிட், பேடிஎம் போன்ற மின்னணு அட்டைகளை பயன்படுத்தி இ-வேலட் முறையில் சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சிலிண்டர் விநியோகம் செய்யும் டீலர்கள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது ஏற்படும் சில்லறை பிரச்சினை, ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.