போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சி-40 என்ற அமைப்பின் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்த கருத்தரங்கம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், உலக நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து என்னுடன், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர். அதன்பின் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பேட்டரி பேருந்துகள் இயங்கப்படுவதை பார்வையிட்டோம்.
சென்னையில் பேட்டரி பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்தோம். பேட்டரி பேருந்துகளை இயக்குவதில் உள்ள சிக்கல்கள், சார்ஜிங் நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசித்தோம்.
மிக விரைவில் தமிழகத்தில் சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும். சி-40 அமைப்பினர் தமிழகத்தில் எந்தெந்த வழித்தடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
ரூ.2 கோடி மதிப்புள்ள பேட்டரி பேருந்துகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பதாலும், சென்னையில் சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ளதாலும் இத்திட்டம் முதலில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 15 நாட்களில் 450 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.