தமிழகம் முழுதும் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சவாடி மையங்களில் பெயர் சேர்த்தல் / நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் 01.01.2019-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2019-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த செப். 1 அன்று வெளியிடப்பட்டு பொதுமக்கள் தங்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் மற்றும் ஜன.1 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (அதாவது 01.01.2001 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள¦) படிவம் 6–னை பூர்த்தி செய்தும்.
* பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–னை பூர்த்தி செய்தும்.
* பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்தும்.
* ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம்பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-னை பூர்த்தி செய்தும்.
அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அம்மையத்தில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் வழங்கலாம்.
மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும், பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு, வரும் அக்டோபர் 07 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலை சரிசெய்ய ஏதுவாக இச்சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.