சென்னையை அடுத்த மாதவரத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.
கடந்த 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் மாதவரம் ரவுண்டானா பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் தமிழகத்தில் முதல்முறையாக அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவால் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான திட்டச் செலவு ரூ.95 கோடியாக அதிகரித்தது. இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியும்.
மேலும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது. இந்நிலையில், ரூ.127 கோடி மதிப்பில் 60 குளிர்சாதன, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் உட்பட 471 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.